வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு அமைச்சுச் செயலாளர்கள் தொடர்பில் அறிக்கையிட்டிருந்த விடயங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உடன் விளக்கம் அளிக்குமாறு மாகாணத் தலைமைச் செயலாளர் அ.பத்திநாதன் சம்பந்தப்பட்ட செயலாளர்களிடம் கேட்டுள்ளார்.
வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பில் விசாரணை மேற்கொள்கொள்ளவேண்டும் என வட மாகாண சபையின் 2016-02-09ஆம் திகதிய 45ஆவது அமர்வில் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வடமாகாண சபையில் முன்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அடுத்து முதலமைச்சர் சகல அமைச்சர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்த ஓர் குழுவை நியமித்தார்.
அந்தக் குழு தனது அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்தது. அந்த அறிக்கை ஊடகங்களில் கசிந்ததை அடுத்துப் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது மாகாண சபையின் அமைச்சரவையில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியது. இரு அமைச்சர்கள் முதலமைச்சரின் வற்புறுத்தலின்படி தமது பதவிகளைத் தியாகம் செய்தனர்.
ஏனைய இருவரைப் பதவி விலக்குவதற்காக மற்றொரு விசாரணைக் குழு நியமிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இந்தச் சர்ச்சைகள் காரணமாக மூன்றாவதாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் பதவியில் இருந்து விலகினார்.
இதேவேளை, விசாரணைக் குழு அமைச்சர்கள் மீது மட்டும் குற்றம் காணவில்லை. அமைச்சின் செயலர்களும் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அமைச்சர்களின் அதிகார முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியது.
அறிக்கையில் இரு அமைச்சின் செயலாளர்கள் தொடர்பிலும் சில பரிந்துரைகள் வைக்கப்பட்டிருந்தன. சில விடயங்களில் தவறு இழைத்ததாகவே நேரடியாக குற்றம் சுமத்தப்பட்டும் இருந்தது. அறிக்கையின் விளைவால் ஏற்பட்ட அரசியல் களேபரங்களுக்கு நடுவில் செயலாளர்கள் மீதான நடவடிக்கைகள் கிடப்பில் கிடந்தன. இப்போது அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
நிர்வாக நடமுறைக்கேற்ப, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் சகல விடயங்களுக்கும் தமது விளக்கங்களை எழுத்து மூலம் முன்வைக்குமாறு தலைமைச் செயலாளர் அ.பத்திநாதன் கேட்டுள்ளார்.