முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலையைகளை நிர்ணயம் செய்து அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழைமை ( நவ. 30) தீர்மானித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான பிரசன்ன டி அல்விஸ், கே.கே.ஏ.பீ.சுவர்ணாதிபதி ஆகியோரை உள்ளடக்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த மனுவானது முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நேற்று (நவ. 29) இம்மனுவானது விசாரணைக்கு வந்த போது, பிரதிவாதிகளுக்காக அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன மன்றில் ஆஜரானார்.
உணவுப் பாதுகாப்பு குழு ஊடாக , முட்டை தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளைப் பெற்று தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கைஎ டுப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன குறிப்பிட்டார்.
இந் நிலையில், குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தனர்.