முட்டைக்குள் கருவில் இருக்கும் போது ஆமைகள் தங்கள் பாலினங்களைத் தாங்களே தேர்ந்தெடுப்பதாக சீனாவில் அண்மையில் நடந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. நடப்பு உயிரியல் எனும் தலைப்பின் கீழ் சீன அறிவியல் அகாடமியின் பேராசிரியர் வெய் குவோ டு (Wei-Guo Du), ஆய்வு மேற்கொண்டார்.
அதன் படி, தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப நகரும் கருவால் அதன் பாலினத்தில் தாக்கம் ஏற்படுவதாகக் கூறியுள்ளார். கேப்சஸெபைன் (capsazepine) என்ற மருந்தைப் பயன்படுத்தி, குளிர்-வெப்ப மாறுதல்களை உணரும் தன்மையை நிறுத்தி வைத்து ஆமைக் கருக்களை பரிசோதித்ததாகவும், தட்ப வெப்பத்துக்கு ஏற்ப ஆமைக் கருக்கள் பெரும்பாலும் ஒரே பாலினத்தை தேர்வு செய்ததாக வெய் குறிப்பிட்டுள்ளார்.
புவி வெப்பமயமாதல் அதிகரிக்க அதிகரிக்க பெரும்பாலும் பெண் ஆமைகளே உலகில் பெருகிப் போகும் என சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் இதை வடக்கு டகோடா பல்கலைக்கழக பேராசியர்கள் உள்பட சிலர் மறுக்கின்றனர்.
முட்டையைக் கையாண்ட விதம், ஃபிளாஷ் லைட் வேறுபாடு கூட இந்த ஆய்வில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறியுள்ளனர். தட்ப வெப்பத்துக்கும், உயிர் சூழலுக்கும், பாலினத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து மேலும் ஆழமாக ஆராய வேண்டும் என சில அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.