ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ஓட்டங்களினால் வெற்றி பெற்று பிளே-ஆப் நுழைவுக்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்தியுள்ளது.
2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் ஆரம்பமான 54 ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான், முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை கொல்கத்தாவுக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அற்புதமான பேட்டிங்கினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 56 (44) ஓட்டங்களையும், வெங்கடேஸ் ஐயர் 38 (35) ஓட்டங்களையும் பெற்றனர்.
172 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், கொல்கத்தாவின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பில் திக்கு முக்காடிப் போனது.
அதனால் 16.1 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்கு பிடித்த ராஜஸ்தான, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக ராகுல் திவாடியா மாத்திரம் 44 (36) ஓட்டங்களையும், சிவம் டூபே 18 ஓட்டங்களையும் பெற, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடனும் டக்கவுட்டும் ஆகினர்.
பந்து வீச்சில் கொல்கத்தா சார்பில் சிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், சகிப் அல் ஹசன் மற்றும் வருன் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் 86 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே-ஆப் நுழைவுக்கான தனது வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.
எனினும் கொல்கத்தா பிளே-ஆப் சுற்றுக்கு நுழையுமா என்பதை இன்று இரவு அபுதாபியில் நடைபெறும் மும்பை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவுகள் தீர்மானிக்கும்.
இதேவேளை இன்றிரவு டுபாயில் ஆரம்பமாகும் மற்றொரு ஆட்டத்தில் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள பெங்களூரு – டெல்லி ஆகிய அணிகள் மோதவுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]