வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டு மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நிராகரித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சுவாமிநாதனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கடந்த காலங்களில் எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99 வீதமானவை செலவிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு 14,050 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அதில் 93.2 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த வருடம் ஒதுக்கீடுசெய்யப்பட்ட 9,000 மில்லியன் ரூபா நிதியில் 8983.7 மில்லியன் ரூபா (99.8வீதம்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திறைசேரியின் இணக்கத்துடன் இத்தரவுகளை வெளியிடுகின்றோம். அமைச்சுக்குரிய நிதி திறைசேரியில் சரியான காலத்தில் வழங்கப்பட்டிருப்பின் 100 வீதம் நிதியைச் செலவிட்டிருக்க முடியும்” – என்றுள்ளது.