ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 23வது லீக் போட்டி, மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ், 18. 4 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் யூசுப் பதான் தலா 29, மணீஸ் பாண்டே 16, முகமது நபி 14 ரன்கள் எடுத்தனர்.
மெக்கிளனகன், ஹர்திக் பாண்டியா, மயங்க் மார்கண்டே தலா 2, பும்ரா, முஸ்டாபைஜூர் ரகுமான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மிக சிறிய இலக்கு என்பதால், மும்பை எளிதாக எட்டிவிடும் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஆரஞ்சு ஆர்மி என செல்லமாக அழைக்கப்படும் சன்ரைசர்ஸ் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனை தாக்குபிடிக்க முடியாமல் மும்பை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் மும்பை, 18. 5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அசத்தலாக வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 34, குர்ணல் பாண்டியா 24 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர்.
எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சித்தார்த் கவுல் 3, ரஷித்கான், பாசில்தம்பி தலா 2, சந்தீப் சர்மா, முகமது நபி, ஷாகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ், அதன்பின் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது.
எனினும் தற்போது மும்பைக்கு எதிரான போட்டியின் மூலம், சன்ரைசர்ஸ் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
முன்னதாக சன்ரைசர்ஸ் தோல்வியடைந்த 2 போட்டிகளிலும், அதன் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் சிறப்பாக பந்து வீசவில்லை.
ஆனால் மும்பைக்கு எதிரான போட்டியில், 4 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதில், ஒரு மெய்டன் ஓவரும் அடக்கம்.
இதனால் அவருக்கே ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. நான் பார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
குறிப்பாக ஒரு சில தோல்விகளுக்கு பிறகு வெற்றி பாதைக்கு திரும்பி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
எங்கள் அணியின் பயிற்சியாளர்களிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்று கொள்கிறோம்.
பயிற்சியாளர்களிடம் நாங்கள் நிறைய பேசுவோம் (டாம்மூடி-தலைமை பயிற்சியாளர், முத்தையா முரளிதரன்-பந்து வீச்சு பயிற்சியாளர், விவிஎஸ் லட்சுமணன்-ஆலோசகர்). அவர்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.
குறிப்பாக முத்தையா முரளிதரன் சார் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். என்ன நடந்தாலும், மிகவும் ‘ரிலாக்ஸ்’ ஆகவும், மிகவும் அமைதியாவும் இருக்க வேண்டும் எனவும், அடிப்படை விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் எனவும் அவர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.