மீண்டும் வெடிக்கும் பிளவுகள்…!
வடக்கின் அபிவிருத்தி விவகாரத்தில், மீண்டும் அதிகாரப் போராட்டம் உருவாகியிருக்கிறது. கடந்தவாரம் யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடத்திய கூட்டத்தை, வடக்கு மாகாண முதலமைச்சரும், அமைச்சர்களும் புறக்கணித்திருக்கின்றனர்.
வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர், இதுபோன்று கூட்டங்கள் நடத்தப்படுவதும், புறக்கணிப்புகள் இடம்பெறுவதும் இதுதான் முதல் முறை அல்ல.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்தபோது, ஆளுநராக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும், பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோரை வைத்து, மத்திய அரசாங்கம், தனியாட்சி நடத்தியது.
வடக்கு மாகாண சபையை கிள்ளுக்கீரையாகப் பாவித்ததுடன், வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்காமலேயே முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இதனால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில், கடைசி வரையில் மத்திய, – மாகாண அரசாங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஏற்படவில்லை. இறுதிவரையில் பனிப்போர் நிலைமையே நீடித்து வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வடக்கு மாகாண ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார நியமிக்கப்பட்டார். பிரதம செயலாளரும் மாற்றப்பட்டார். அதற்குப் பின்னர், மத்திய, – மாகாண அரசுகளுக்கு இடையில் ஓரளவுக்கு சுமுகமான உறவுகள் ஏற்பட்டன.
ஆனாலும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், முரண்பாடுகள் வெடித்தன. அந்த முரண்பாடுகள், மேடைகளில் பகிரங்கமாகப் பேசப்படும் அளவுக்கும் சென்றிருந்தன.
எனினும், அந்த முரண்பாடுகள், இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த தைப்பொங்கல் விழாவுடன் ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கின்ற நிலையில், புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டார்.
மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்த ரெஜினோல்ட் குரே, வடக்கின் ஆளுநராக பொறுப்பேற்றது, மத்திய, – மாகாண அரசுகளுக்கு இடையிலுள்ள இடைவெளியைக் குறைக்கும் என்ற பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பதவியேற்பு நிகழ்விலேயே சர்ச்சைகளுக்கு பிள்ளையார் சுழியைப் போட்டார். அடுத்தடுத்து அவர் வெளியிட்ட பல்வேறு கருத்துக்கள், தமிழ் மக்களை முகம் சுழிக்க வைத்ததுடன், வடக்கு மாகாண முதலமைச்சரையும், மாகாணசபையையும், அதிருப்தி கொள்ள வைத்தது.
ஒரே நிகழ்வுகளின் போது, வெளிக்காட்டிக் கொள்ளாவிடினும், முதலமைச்சரும், ஆளுநரும் அவ்வப்போது, ஒருவரை ஒருவர் விமர்ச்சிக்கின்ற நிலை உருவாகியிருக்கிறது. இப்படியான சூழலில்தான், யாழ். நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை, ஆளுநர் தனது செயலகத்தில் கடந்தவாரம் கூட்டியிருந்தார்.
உலக வங்கி அளிக்க முன்வந்துள்ள, 5.5 கோடி டொலர் நிதியுதவியில், மேற்கொள்ளும் இந்த திட்டத்துக்கான வரைவுகளைத் தயாரிக்கும் ஒரு கூட்டமே இது. இலங்கை நாணயப் பெறுமதியில், கிட்டத்தட்ட 800 கோடி ரூபாவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம். போர் முடிவுக்கு வந்த பின்னர், நகர அபிவிருத்தி ஒன்றுக்காக வடக்கில் மேற்கொள்ளப்படும் அதிகபட்ச நிதி ஒதுக்கீடாக இதனையே கருதலாம். ஆனால், இந்தக் கூட்டத்தை வடக்கு மாகாண முதலமைச்சரும், அமைச்சர்களும் புறக்கணித்திருக்கின்றனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும், மாகாணசபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும் மாத்திரம் இதில் பங்கேற்றுள்ளனர்.
வெளிப்படையாக கூறுவதானால், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் மாத்திரம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் இதனைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன், சித்தார்த்தன் ஆகியோரும், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான ஆனோல்ட், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, அஸ்மின், சிவயோகம், ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு இறுதியில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட போது, முதலமைச்சருக்கு எதிராக, வடக்கு மாகாணசபையில் போர்க்கொடி எழுப்பிய உறுப்பினர்களே ஆளுநரின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பெரியளவிலான அபிவிருத்தித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கின்ற இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்திருப்பது நியாயமா என்ற பரவலான கேள்விகள் இருக்கின்றன.
அதேவேளை, வடக்கு மாகாணசபை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை, மத்திய அரசாங்கம் ஆளுநரைப் பயன்படுத்தி, மீண்டும் கையாளத் தொடங்குகிறதா என்ற சந்தேகத்தையும் இந்த விவகாரம் எழுப்ப வைத்திருக்கிறது.
இந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக தாம் ஏற்கனவே பல்வேறு தரப்புகளுடன் பேசியிருப்பதாகவும், இந்தநிலையில், ஆளுநரின் ஊடாக இதனை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துணைபோவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
வடக்கு மாகாணசபையுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, ஆளுநருடன் இணைந்து செயற்பட அவர்கள் முனைவதான குற்றச்சாட்டை முதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேவேளை, இன்னொரு பக்கத்தில் அபிவிருத்தித் திட்டங்களில் ஆளுனரின் தலையீடுகள் இருக்காது என்றும், அவரைத் தேவையின்றி விமர்சித்து, அபிவிருத்தித் திட்டங்களை குழப்பக்கூடாது என்றும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு பகுதியாகவும், முதலமைச்சர் உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்களில் கணிசமானோர் இன்னொரு பகுதியாகவும் செயற்பட முனைவது இதிலிருந்து புலப்படுகிறது.
வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கிய பின்னர், அதன் பெரும்பாலான காலத்தை, மத்திய அரசு மீதான விமர்சனங்களிலும், மத்திய அரசின் தலையீடுகள் பற்றி குற்றம்சாட்டுவதிலுமே கழித்து விட்டது. இப்போதும் அந்த நிலை மாறிவிடவில்லை.
அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் இரண்டு அணிகளை உருவாக்கி, ஒன்றுடன் ஒன்றை மோதவிடும் காரியத்தை, மத்திய அரசாங்கம் மிகக் கச்சிதமாகவே முன்னெடுக்கிறது என்பதை இப்போதைய நிகழ்வுகளில் இருந்து உணர முடிகிறது.
வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். நகர அபிவிருத்தி தொடர்பாக ஒரு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, வடக்கு மாகாணசபையை பங்காளர்களாக்குவதை விட்டு, பார்வையாளர்களாக மாற்ற முயன்றிருக்கிறது மத்திய அரசாங்கம்.
இதுவும் ஒரு அதிகாரப் பறிப்பு நடவடிக்கைதான். அதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் துணை போகச் செய்திருப்பது தான், மத்திய அரசாங்கத்தின் சாதுரியம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதுவரை காலமும் இருந்து வந்த முரண்பாடுகள் இப்போது வேறொரு வடிவத்தை எடுக்கத் தொடங்கியுள்ளது.
கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள், தமிழ் மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தாலும், அது அவர்களின் கட்சி சார்ந்த பிரச்சினை என்றே பலரும் ஒதுங்கிப் போயிருந்தனர்.
ஆனால்அ இப்போது, ஒரு கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகள், வடக்கின் அபிவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகின்றபோது அதனைத் தமிழ் மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.
யாழ். நகர அபிவிருத்திக்காக கிடைத்துள்ள மிகப்பெரிய தொகையை பயனுள்ள வகையில் செலவிடும் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் உள்ளக அரசியல் முரண்பாடுகள் பின்னடைவை ஏற்படுத்தி விடும் போலத் தெரிகிறது.
உலக வங்கியின் நிதிஉதவியுடன், இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை எடுத்துச் செல்லும் திட்டமும் கூட, தடைப்பட்டுப் போனதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
வடக்கில் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒருவரை ஒருவர் குட்டி முந்திக் கொள்வதும், கோள் சொல்வதும், தமிழர் அரசியலின் சாபக்கேடாகி விட்டது.
வடக்கிற்குள் உள்ள மக்கள் குடிநீரைப் பகிர்ந்து கொள்வதற்கு – ஒரு திட்டத்தை ஒற்றுமையாக முன்னெடுப்பதற்கே ஒன்றுபட முடியாதளவுக்கு, தமிழர்கள் மத்தியில் பிளவுகளும் பிரிவினைகளுக்கும் இருக்கும்போது, அரசியல் தீர்வு ஒன்றை சுலபமாக எட்டமுடியும் என்று கருதத் தோன்றவில்லை.
இந்தப் பிளவுகள் தான், கடந்த காலங்களில் தமிழர் தரப்பு தோல்வியையும் அழிவுகளையும் சந்திக்கக் காரணமாயி்ற்று.
தமிழர்களின் பிளவுகளை சிங்கள அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு பயன்பெற்றனவோ, அதுபோலத்தான், இப்போதும், பயனடைவதற்கு முயற்சிக்கின்றன.