தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம்.
நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மறுத்தனர்.
இதனால் பல வருடங்களாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும் அவரது மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு டிடெக்டிவ் நேசமணி என்ற துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்க இருப்பதாக போஸ்டருடன் தகவல் வந்தது. பின்னர் அது வதந்தி என்று தெளிவுப்படுத்தினர். ஓடிடி தளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைத்து இருப்பதாகவும் பேசப்பட்டது. அதுவும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், ஓடிடி தளத்துக்காக தயாராகும் புதிய படங்களிலும், சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது.
10 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம் தடுத்தால் வடிவேலு நடிக்கும் படங்களை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.