பயங்கரவாதத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகி கடுமையாக சேதமடைந்த நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அதற்கமைய அந்த தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பு துணை ஆயர் அந்தோணி ஜெயகோடி தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களினால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் சார்பாக இதன்போது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
குறித்த தேவாலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 3 மாதங்களின் பின்னர், இன்று திறக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களினால் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததோடு, 500 பேர் வரையில் காயமடைந்தனர்.
அன்றைய தாக்குதலில் செபஸ்டியன் தேவாலயத்தில் மாத்திரம் 114 பேர் உயிரிழந்தனர். 255 பேர் காயமடைந்தனர். அவர்களில் இன்னும் சிலர் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.