புஜாரா மீண்டும் கவுன்டி அணிக்காக விளையாட உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா, 30. டெஸ்ட் போட்டியில் நங்கூரமான ஆட்டத்தால், அணியை கரை சேர்ப்பதில் கைதேர்ந்தவர். இவரின் நிதான ஆட்டம் காரணமாக, ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டியில் இடம் கிடைப்பது இல்லை. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடருக்கான ஏலத்திலும் எந்த அணியும் எடுக்கவில்லை. இதையடுத்து, இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில்(ஏப். 7– மே 27) விளையாட முடிவு செய்துள்ளார்.
இரண்டாவது முறை:
இரண்டாவது முறையாக யார்க்சயர் அணிக்காக விளையாட உள்ளார். புஜாராவின் ஒப்பந்தம் சில வாரங்களுக்கு முன்பே உறுதியாக இருந்தது. ஆனால், ஐ.பி.எல்., ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் அறிவிப்பு தாமதமாக வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 7ம் தேதி லீட்சில் துவங்கவுள்ள முதல் தர போட்டியில் களமிறங்க உள்ளார். ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை தொடரிலும் பங்கேற்பார்.
இங்கிலாந்து தொடருக்கு உதவும்:
இதன்பின், (ஜூன் 14–18) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் நடக்கவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். போட்டி முடிந்தவுடன் மீண்டும் இங்கிலாந்து செல்கிறார். வரும் ஆகஸ்டில் இங்கிலாந்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்து கொள்கிறது. அப்போது, சக வீரர்களுடன் புஜாரா இணைய உள்ளார். கவுன்டியில் விளையாடுவது, இங்கிலாந்து தொடரில் சாதிக்க புஜாராவுக்கு உதவியாக அமையும். ஏற்கனவே, யார்க்சயர் அணியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து புஜாரா கூறுகையில்,‘‘ யார்க்சயர் அணிக்காக மீண்டும் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் சச்சின், யுவராஜ் சிங் பங்கேற்ற அணிக்காக விளையாட இருப்பதை கவுரவமாக பார்க்கிறேன்,’’ என்றார்.