கையடக்க தொலைபேசி மற்றும் துணை சாதனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் இவ்வாறு மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வருடாந்த வருமானம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பெறும் வர்த்தகர்களுக்கு சமூக பாதுகாப்பு வரி அறிவிடப்படுகிறது.
இதனையடுத்து பெரிய இறக்குமதியாளர்கள் பொருட்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கும்போது வரியைச் சேர்க்கின்றனர்.
தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது

இதனையடுத்து சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்கும்போது கூடுதல் வரிகளுடன் விலையை அதிகரிப்பதாக இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை 2.5 வீதம் என்று அறிவித்துள்ளது. எனினும் தயாரிப்பு வாடிக்கையாளரை சென்றடையும் போது, அது கிட்டத்தட்ட 5வீதமாக இருக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், கையடக்க தொபைபேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலை மீண்டும் உயரும் என்பது உறுதியாகும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் தற்போது குழப்பமான நிலையில் உள்ளது.
இந்தநிலையில் அரசாங்கத்தால் வரிகள் மற்றும் கட்டணங்களை அதிகரிக்க முடியும், ஆனால் தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்றும் இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.