மிஷன் சாப்டர் 1 – விமர்சனம்
தயாரிப்பு : லைக்கா புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : அருண் விஜய், எமி ஜேக்சன், நிமிஷா சஜயன், பேபி இயல், பரத் பொப்பன்னா மற்றும் பலர்.
இயக்கம் : விஜய்
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மாநாடு ஒன்றை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுகிறார்கள். இது குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிய வருவதால்.. தீவிரவாதிகள் தங்களுடைய குழுவில் மேலும் சில தீவிரவாதிகளை இணைத்துக்கொள்ள திட்டமிடுகிறார்கள். இதற்காக அவர்கள் இருக்கும் நாட்டிற்கு செல்கிறார்கள்.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகரில் உள்ள நவீன மையப்படுத்தப்பட்ட சிறையில் அந்த தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தன்னுடைய மகளின் சத்திர சிகிச்சைக்காக லண்டனுக்கு வருகிறார் நாயகன் அருண் விஜய். அங்கு அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களை தாக்கும் போது அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
அந்த நவீன பயன்படுத்தப்பட்ட சிறைச்சாலையை வில்லன் குழு ஹேக் செய்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகளை தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இதைத் தெரிந்துக் கொண்ட அருண் விஜய், அவர்களை தடுக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? தீவிரவாதிகள் விடுதலை ஆனார்களா? இல்லையா? அருண் விஜயின் குழந்தைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பதை இப்படத்தின் முதல் பாக திரைக்கதை.
சிறை அதிகாரி தோற்றத்தில் அருண் விஜய் கச்சிதமாக பொருந்துகிறார். எக்சன் காட்சிகளில் இயல்பாகவே அதிரடி காட்டும் அருண் விஜய்க்கு இந்த படத்தில் அதிக சண்டைக் காட்சிகள்.. அனைத்திலும் தன் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் எக்சன் அவதாரம் எடுத்திருந்தாலும்.. அதற்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தால் தான் நாயகனின் எக்சன் அவதாரம் பார்வையாளர்களிடத்தில் எடுபடும்.
ஆனால் இயக்குநர் விஜய்.. வில்லனுக்குரிய திரை எழுத்தை நேர்த்தியாக எழுதி உருவாக்காததால்.. அருண் விஜய் மட்டும் எக்சன் செய்வது ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சியை தருகிறது. நாயகியாக நடித்திருக்கும் எமி ஜேக்சன் லண்டன் சிறையில் அதிகாரியாக நடித்திருந்தாலும் அவருக்கு போதிய வாய்ப்பு இல்லை. படத்தில் லண்டன் சிறையில் கைதிகளுக்கும், சிறை துறையின் உணவக ஊழியர்களுக்கும் இடையே இடம்பெறும் சண்டைக் காட்சியில் சண்டை பயிற்சி இயக்குநரின் ‘மிளகாய் பொடி ஐடியா’ பாமர ரசிகர்களிடையே கைத்தட்டலைப் பெறுகிறது. ‘தாய் இல்லாதவன் தான் ஏழை’ என்ற டொயலாக் சென்டிமென்ட்டாக வொர்க் அவுட் ஆனாலும்.. அது மனதில் பதியவில்லை. ஏனெனில் படம் முழுவதும் எக்சன்.. எக்சன்.. எக்சன்.. காட்சிகள் நிரம்பி வழிகிறது. இதனால் பல இடங்களில் லாஜிக் மீறல் அப்பட்டமாக தெரிவதால் ரசிகர்களிடம் கொட்டாவி உண்டாகிறது.
எக்சன் காட்சிகளை ரசிகர்கள் ரசிப்பார்கள். பாராட்டுவார்கள். கைதட்டுவார்கள். வெற்றி பெறவும் செய்வார்கள். ஆனால் அதற்கான திரைக்கதை அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். அது இந்த திரைப்படத்தில் மிஸ்ஸிங். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தான் ரசிகர்களை இருக்கையில் அமர வைக்கிறது. அருண் விஜயின் கடின உழைப்பு அழுத்தம் இல்லாத கதையினால் வீணடிக்கப்பட்டிருக்கிறது.