தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பேரின் 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை (20) மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.
மிருசுவில் பகுதியில் கடந்த 2000 டிசம்பர் 20ஆம் திகதி சிறுவர்கள் உட்பட 8 பேரை இலங்கை இராணுவம் கூரிய ஆயுதங்களால் குத்திப் படுகொலை செய்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிக்கு 2015 ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அவர் 2020 மார்ச் மாதம் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.