வடமேற்கு மியன்மாரில் கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் மோதல்களில் சுமார் 400 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதை அந்நாட்டு உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
இது கடந்த பல தசாப்தங்களில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளில் அதிக உயிரிழப்பு கொண்டதாக கருதப்படுகிறது.
இந்த வன்முறைகளால் சுமாத் 38,000 ரொஹிங்கியாக்கள் மியன்மாரில் இருந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்திருப்பதாக ஐ.நா வட்டாரம் கூறுகிறது. ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் பொலிஸ் நிலைங்கள், இராணுவ தளங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் ஒன்றை நடத்தியதை அடுத்தே அங்கு மோதல் வெடித்துள்ளது.
அதிகாரிகளின் புதிய கணிப்பின்படி, “ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை எல்லையை கடந்து 31,000 பேர் பங்களாதேஷை அடைந்துள்ளனர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு இராணுவ நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மார் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் தம்மை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அங்கிருந்து தப்பிவரும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாட்டின் 1.1 மில்லியன் ரொஹிங்கிய முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் அந்நாட்டு தேசிய தலைவி ஆங் சான் சூக்கி பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறார். இந்த விடயம் தொடர்பில் அவர் வாய் திறப்பதில்லை என்று மேற்குலம் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.
மியன்மாரில் பாகுபாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு பிரஜா உரிமையும் மறுக்கப்படுகிறது. அவர்கள் பங்களாதேஷில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறிகள் என்று மியன்மாரின் பெரும்பான்மை பெளத்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மோதல்கள் மற்றும் இராணுவத்தின் படை நடவடிக்கைகளில் சுமார் 370 ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்களும் 13 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று இரு அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 14 பொதுமக்கள் இந்த மோதல்களில் பலியாகி இருப்பதாக மியன்மார் இராணுவம் கூறியுள்ளது.
ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ரொஹிங்கியாக்கள் வசிக்கும் ரகினே மாநிலத்தின் தலைநகர் சித்வேயில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மதக்கலவரத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டு சுமார் 140,000 ரொஹிங்கிய மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் சிறிய ரொஹிங்கிய ஆயுதக் குழு ஒன்று கடந்த ஒக்டோபரில் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு புதிதாக மோதல் உக்கிரமடைந்தது.
இந்த மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 11,700 பெளத்த பெரும்பான்மை மக்களை மியன்மார் இராணுவம் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.
இந்நிலையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் கிராமம் ஒன்றுக்கு அருகில் உள்ள இராணுவத்தினர் மீது கடந்த வியாழக்கிழமை 150க்கும் அதிகமான ரொஹிங்கிய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் 700 பேர் வரை வெளியேற்றப்பட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
வன்முறையில் இருந்து தப்பி வந்த 20,000க்கும் அதிகமான ரொஹிங்கியாக்கள் எல்லையின் ஆளில்லா பகுதியில் நிர்க்கதியாகியுள்ளனர். அகதிகளின் திடீர் படையெடுப்பால் பங்களாதேஷில் உள்ள உதவி பணியாளர்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறு தப்பிவரும் மக்கள் பட்டினி மற்றும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்படுகின்றனர். இதில் சில ரொஹிங்கிய மக்கள் தரைவழி ஊடாக எல்லையை கடக்க முயற்சிக்கும் அதேவேளை மேலும் சிலர் பங்களாதேஷ் மற்றும் மியன்மாரை பிரிக்கும் நாப் நதியை படகுகள் ஊடாக கடக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு நதியை கடக்க முயன்ற 15 ரொஹிங்கிய பெண்கள் மற்றும் 11 சிறுவர்களின் சடலங்கள் ஆற்றில் மிதந்து வந்த நிலையில் பங்களாதேஷ் கரையோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இதன்மூலம் ஆற்றில் மூழ்கி பலியாகி இருக்கும் ரொஹிங்கியாக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.