நாட்டிலுள்ள அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களும் சூரிய மின் சக்தி பிறப்பாக்கி (Solar power) ஊடாக மின் உற்பத்தி செய்யும் முறைமைக்கு மாற வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் குறித்து தேர்ச்சிபெற்ற ஒமல்பே சோபித தேரர் இதற்கு தலைமை தாங்குவாராயின் அதற்கு தான் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சோலர் மின் உற்பத்தி திட்டத்திற்கு ஒத்துழைப்பு
மேலும், “ சோலர் மின் உற்பத்தி வேலைத்திட்டத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் என்ற ரீதியில் நான் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றேன்.
நாட்டிலுள்ள தலைவர்களும் இந்த வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கின்றேன்.
பொதுமக்கள் தூண்டப்படும் வகையில் மின் கட்டணத்தை எப்போதும் செலுத்த மாட்டோம் என கூறுவது ஒமல்பே சோபித தேரர் போன்ற மதகுருமாருக்கு பொருத்தமானது அல்ல.
மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு
கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட மின் கட்டண திருத்தம் காரணமாக விகாரைகளில் மின் கட்டணமானது பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விகாராதிபதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறித்த மின் கட்டண உயர்விற்கு நிவாரணம் ஒன்றை பெற்றுத்தருமாறு நேற்று நாடளாவிய ரீதியில் விகாராதிபதிகள் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
அத்துடன் இவ்வாறு உயர்வடைந்துள்ள மின் கட்டணத்தை நாங்கள் எப்போதும் செலுத்த போவதில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே எரிசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.