அரசாங்கம் உத்தேசித்துள்ள மின் கட்டண அதிகரிப்பு சாதாரண மக்களையே அதிகம் பாதிக்கப்போகின்றது. அதனால் மின் கட்டண அதிகரிப்பை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,
அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்திருக்கின்றது. இந்த அதிகரிப்பு மக்களால் தாகங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கின்றது. அதிகரிக்கப்பட்டிருக்கும் மின்கட்டத்தின் தாக்கம், அடுத்த மாதம் மின் பட்டியல் வீட்டுக்கு வரும்போதுதான் மக்களுக்கு உணர முடியுமாக இருக்கும். நாடு பாரிய நெருக்கடி நிலைமையில் இருக்கின்றதை நாங்கள் அறிகின்றோம். ஆனால் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் மின் கட்டணம் காரணமாக அதிகம் பாதிக்கப்படப்போவது, சாராண சிறிய குடும்பங்களாகும்.
அதேபோன்று இந்த மின் கட்டண அதிகரிப்பு, தொழிற்சாலைகள், சுற்றுலா துறைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அரசாங்கம் இந்த மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து, சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில்,
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு எதிர்வரும் 29ஆம் திகதி முழு நாள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம், அடுத்த மாதம் கொண்டுவர இருக்கின்ற திருத்த வரவு செலவு திட்டத்திலே, நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றோம். குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு திருத்த வரவு செலவு திட்டத்தில் நிவாரணம் வழங்க உத்தேசித்திருக்கின்றோம். அதனை செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.