இலங்கையின் அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகின்றார்கள் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின் கட்டண உயர்வை ஆதரிக்க மறுத்த தம்மை பதவி நீக்கம் செய்ய எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனினும், தன்னை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் தேவைப்படும் 113 பெரும்பான்மையை பெற முடியாது.
மின் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்
மின்சாரத்தின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. எனினும் தேவை குறைவது நஷ்டத்தில் இருக்கும் இலங்கைக்கு உதவாது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு மூலம் இழப்பை ஈடுகட்ட மின்சார சபை முயற்சித்து வருகிறது.
அரசியல்வாதிகளுக்கு புரியாத அடிப்படை விஷயங்கள் இவையாகும். அவர்களுக்கு பொருளாதாரம் புரியவில்லை. அவர்களுக்கு அரசியல் மட்டுமே தெரியும்.
நாட்டில் மின்சாரக் கட்டணத்தில் இன்னுமொரு சீர்திருத்தம் சாத்தியம்.அது மற்றொரு கட்டண உயர்வாகக் கூட இருக்கலாம் என்று மின்சார சபை கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி பதவிக்கு வருவதற்காக கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்த ஜனக ரத்நாயக்க, தற்போது இந்த தீர்மானத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பொது அறிவு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.