நாடு முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக மின்சார நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு தான் வருந்துவதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி(Kumara Jayakodi) தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோகத்தை நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட நாளாந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் மூன்று செயலிழந்தன.
நாளாந்த மின்வெட்டு
இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு 900 மெகாவாட் மின்சார திறனை இழந்த நிலையில் நிலைமையை நிர்வகிக்க மின்வெட்டை நடைமுறைப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இதன் காரணமாக, இலங்கை மின்சார சபை பெப்ரவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் தலா ஒன்றரை மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது, அதே போல் நேற்று ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இருப்பினும், இலங்கை மின்சார சபை தற்போது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில், மின்பிறப்பாக்கி ஒன்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இதுவரை நீடித்து வந்த நாளாந்த மின்வெட்டு முடிவுக்கு வந்துள்ளது.
தேசிய மின்சார கட்டமைப்பு
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நுரைச்சோலையில் உள்ள ஏனைய இரண்டு மின்பிறப்பாக்கிகளை படிப்படியாக தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.