ரூ.8 ஆயிரம் கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்.பி. மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமார், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளான மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமாருக்கு சொந்தமான 3 பண்ணை வீடுகள் மற்றும் ஒரு நிறுவனத்தில் அமலாக்கத் துறை கடந்த 8-ம் தேதி சோதனை நடத்தியது.
அப்போது கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமார், டெல்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
சுரேந்திர குமார் ஜெயின், வீரேந்திரா ஜெயின் என்ற இரு சகோதரர்கள் மற்றும் சிலர், போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரித்து வருகிறது.
இதில் ஜெயின் சகோதரர் களுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்துடன் மிசா பாரதி தம்பதியரின் மிஷைல் பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.