இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கம், 2023ஆம் ஆண்டுக்கான அதன் முதலாவது கூடைப்பந்தாட்டப் போட்டியை கொழும்பு சுகததாச அரங்கில் 2023 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது.
மூத்தவர்களுக்கான 6 வயதுப் பிரிவுகளில் ஏற்பாடு செயப்பட்டுள்ள இந்த சுற்றுப் போட்டியின் முதலாம் கட்டப் போட்டிகள் பெப்ரவரி 3, 4, 5ஆம் திகதிகளிலும் இறுதிச் சுற்று உட்பட இரண்டாம் கட்டப் போட்டிகள் பெப்ரவரி 10, 11, 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படும் என மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கத் தலைவர் கயத் ஜயசிங்க தெரிவித்தார்.
போட்டிகளுக்கான பதிவுகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் 2023 ஜனவரி 18ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பப் படிவங்களை பி ஆர் சி பெவிலியனில் சமர்ப்பிக்குமாறு கோரப்படுகிறது.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேறப்பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய 6 வயது பிரிவுகளில் இருபாலாருக்கும் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு அணியிலும் 6 முதல் 10 வீரர்கள் அல்லது வீராங்கனைகள் பதிவு செய்யப்படவேண்டும். ஒரு வயதுப் பிரிவுக்கான அணியில் பதிவு செய்யப்படும் வீரர் அல்லது வீராங்கனை மற்றொரு வயதுப் பிரிவிலும் பங்குபற்ற அனுமதிகப்படுவார் என மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்க செயலாளர் பெசில் சில்வா கூறினார்.
ஒவ்வொரு அணிக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களினால் ஒரு தொகுதி சீருடை வழங்கப்படும். இரண்டாவது தொகுதி சீருடையை அந்தந்த அணிகள் சொந்தமாக கொள்வனவு செய்ய வேண்டும். வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான சீருடைகளின் அளவுகள் மற்றும் நிறங்கள் விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிடப்படவேண்டும்.
சர்வதேச கூடைப்பந்தாட்ட விதிகளுக்கு அமைய போட்டிகள் நடத்தப்படுவதுடன் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் முடிவே இறுதி தீர்மானமாகும்.