பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் உள்ள மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் நினைவேந்தல் பணிக்குழுவினர் கடந்த புதன்கிழமை (08) தேராவில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கையொப்பங்களைத் திரட்டியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது அன்புக்குரியவர்கள் விதைக்கப்பட்டிருக்கும் காணியை பலவந்தமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இராணுவம் அந்த நிலத்திலும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தேராவில் துயிலும் இல்ல நினைவேந்தல் பணிக்குழு உறுப்பினர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ள பல இடங்களில் இராணுவத்தினர் தற்போதும் தங்கியுள்ளனர். தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் இன்று வரை இராணுவத்தினர் தங்கியுள்ளனர். ஒருசில உறுப்பினர்களே இங்கு குடியிருக்கின்றனர். வியாபாரத்திற்காக கள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இடத்தில் இருந்து இராணுவத்தை அகற்றி பெற்றோர்கள் சுதந்திரமாக இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும்.”
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி பிரதேசவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட கையொப்பங்களை வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
வீரச்சாவடைந்த சுமார் 7,000 முன்னாள் போராளிகள் புதைக்கப்பட்டுள்ள தேராவில் மயானத்தின் எழுபத்தைந்து வீதத்திற்கும் அதிகமான காணியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் புதைக்கப்பட்டுள்ள காணியில் இராணுவத்தினர் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவதாகக் குற்றம் சுமத்தி, தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை உடனடியாக அகற்றுமாறு உறவினர்கள் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ் மக்களால் மாவீரர்களாக போற்றப்படும் பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புதைக்கப்பட்டுள்ள ‘துயிலம் இல்லம்’ என அழைக்கப்படும் பல மயானங்கள் போர் முடிவடைந்த பின்னர் அரச படையினரால் அழிக்கப்பட்டு முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் உயிரிழந்த தமிழ் போராளிகளின் 20,400 புதைகுழிகளை உள்ளடக்கிய சுமார் 25 மயானங்கள் இலங்கை இராணுவத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
சைவத் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமான இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் அடிப்படை உரிமையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் உறுதியளித்துள்ளார்.