வடக்கு – கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது.
அநுர அரசின் அனுமதி
நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பினர்களை நினைவேந்த அனுமதி வழங்குவதா, தமிழ் மக்களுக்கு அநுர அரசு செய்யும் நன்றிக் கடன்?
தெற்கில் உள்ள மக்கள் அநுர அரசின் தான்தோன்றித்தனமான இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்.” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.