‘கேஜிஎஃப்’ படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம், ‘அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக’ அப்பட இயக்குநர் ஷிவானி செந்தில் தெரிவித்திருக்கிறார்.
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’.
இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.
‘கார்கில்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜோன் விஜய், ராம்ஸ், ஜோர்ஜ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ‘நெடுநல்வாடை’ படப்புகழ் இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்களின் இசையமைத்திருக்கிறார்.
இந்த படம் எதிர்வரும் 20 ஆம திகதியன்று படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ நேராகப் பயணிக்க வேண்டிய பயணத்தில் டேக் டைவர்ஷன் இருந்தால் ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும்.
முதலில் தயக்கம் இருந்தாலும், டென்ஷன் ஏற்பட்டாலும், பயணித்தால்… சென்றடைய வேண்டிய இலக்கு நல்லதாகவே இருக்கும். எம்முடைய வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தத் திரைப்படத்தில் உங்களுக்கு டேக் டைவர்ஷன் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் டென்ஷனைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதை மையப்படுத்தி இருக்கிறேன்.
வாழ்க்கையே ஒரு டேக் டைவர்ஷன் தான். ஒரே நாளில் நடைபெறும் பயணம் தொடர்பான கதை.” என்றார்.