பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸை மோசமாக ஆரம்பித்த அவுஸ்திரேலியா, மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 3ஆம் நாள் (வியாழக்கிழமை 28) ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதமிருக்க 241 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் மேலும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் போட்டியில் முடிவு கிட்டும் என நம்பப்படுகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா (0), மானுஸ் லபுஷேன் (4), டேவிட் வோர்னர் (6), ட்ரவிஸ் ஹெட் (0) ஆகியோர் ஆட்டம் இழக்க 6ஆவது ஓவரில் அவுஸ்திரேலியா வெறும் 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
எனினும் ஸ்டீவன் ஸ்மித்துடன் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த மிச்செல் மார்ஷ் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் 153 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உயிர்கொடுத்தார்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மிச்செல் மார்ஷ் துரதிர்ஷ்டவசமாக சதத்தை 4 ஓட்டங்களால் தவறவிட்டார்.
130 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டறிகளுடன் 96 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு பக்கபலமாக மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் 176 பந்துகளில் 3 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மிர் ஹம்ஸா 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ரிஸ்வான், ஆமிர் ஜமால் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கையை 215 ஓட்டங்களாக உயர்த்தினர்.
தொடர்ந்து ஆமிர் ஜமால் ஷஹீன் ஷா அப்றிடி ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன் அதில் 21 ஓட்டங்களை அப்றிடி பெற்றுக்கொடுத்தார்.
ஆமிர் ஜமால் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றிய பெட் கமின்ஸ் தனது 10ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.
நேதன் லயன் 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 318 ஓட்டங்களைப் பெற்றது.