பொலிஸ் கழகத்துக்கு எதிராக மாத்தறை கொட்டவில மைதானத்தில் வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் மாத்தறை சிட்டி 3 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியின் 62ஆவது நிமிடத்தில் பொலிஸ் பின்கள வீரர் ஹஷிக்க நவோத போட்டுக்கொடுத்த சொந்த கோல் (ஓன் கோல்) மாத்தறை சிட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ஆபிரிக்கரான போவாடு பிறின்ஸ் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு மாத்தறை சிட்டியை 1 – 0 என முன்னிலையில் இட்டார்.
ஆனால், 13 நிமிடங்கள் கழித்து நபீல் சுதார் போட்டுக்கொடுத்த கோலின் உதவியுடன் பொலிஸ் கழகம் கோல் நிலையை 1 – 1 என சமப்படுத்தியது.
இதனை அடுத்து போட்டியில் சூடு பிடிக்கத் தொடங்கியது. இரண்டு அணிகளும் மாறி மாறி எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தன.
இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்தன.
இடைவேளையின் பின்னர் 59ஆவது நிமிடத்தில் கேஷான் விஹங்க போட்ட கோலின் உதவியுடன் மாத்தறை சிட்டி மீண்டும் முன்னிலை அடைந்தது.
மூன்று நிமிடங்கள் கழித்து பொலிஸ் கழகத்தின் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்துக்கு மத்தியில் ஹஷிக்க நவோத பந்தை திசைதிருப்ப முயற்சித்தபோது பந்து தவறுதலாக அவரது சொந்த கோலினுள் புகுந்தது. இதன் பலனாக மாத்தறை சிட்டி 3 – 1 என முன்னிலை அடைந்தது.
எவ்வாறாயினும் 6 நிமிடங்கள் கழித்து மாற்றுவீரர் அன்தனி தனுஜன் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு பொலிஸ் கழகத்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
அதன் பின்னர் பொலிஸ் கழகம் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது. ஆனால், மாத்தறை சிட்டியின் தடுத்தாடல் வியூகம் அதன் முயற்சிகளைக் கட்டுப்படுத்தியது.