கர்ப்பம் தரித்துள்ளதாக பாடசாலை ஆசிரியர்களினால் குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலை மாணவி மீது எந்தவித தவறும் இல்லையென மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்வதாக வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இன்று (20) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக தம்புள்ள வைத்தியசாலை வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
குறித்த சிறுமியை சில நாட்கள் வைத்திய சாலையில் அனுமதித்து பல பரிசோதனைகளை மேற்கொண்டதில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவோ, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவோ எந்தவித சான்றுகளும் இல்லையென நிரூபனமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கெகிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மடாடுகம பிரதேச அரச பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகமும் அதிபரும் வழங்கிய தண்டனையில் குறித்த மாணவி தம்புள்ள ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த மாணவி காலை உணவில்லாது பாடசாலைக்கு சென்றதனாலேயே வாந்தி எடுத்து மயக்கமுற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் குறித்த மாணவியின் பாடசாலை அதிபர் எது வித விசாரணைகளுமின்றி பெற்றோரை வரவழைத்து மாணவி கர்ப்பமாக இருக்கிறார் என கதையை உருவாக்கி பாடசாலை நிர்வாகத்திடம் கூறி பாடசாலையை விட்டும் மாணவியை நீக்கியுள்ளார்.
இதனாலேயே மன வேதனையடைந்த நிலையில் மாணவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.