மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்காதது தவறான விடயம்! ப.சத்தியலிங்கம்
மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்காதது தவறான விடயம் என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு வருகை தந்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய தொகுதி முறையில் அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமையால் வவுனியா மாவட்டத்தில் மாகாணசபை தேர்தலுக்கான புதிய தொகுதி பிரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தோம்.
அதன் பின் வவுனியா மாவட்ட செயலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு ஒன்று நடைபெறவுள்ளதாக கூறினார்கள். இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கு இதில் கலந்து கொள்வது தொடர்பில் எந்தவித உத்தியோக பூர்வமான அறிவித்தலும்வழங்கப்படவில்லை.
இந்த எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் கடந்த 9 ஆம் மாதம் 3 ஆம் திகதி உத்தேச திட்டம் ஒன்றினை வழங்கியிருந்தேன். அதில் வவுனியா மாவட்டத்தின் எல்லைகளை எவ்வாறு பிரிக்கலாம் என குறிப்பிட்டு இருந்தேன். அதனை அரசாங்க அதிபர் ஊடாகவும், மாகாணசபை பிரதம செயலாளர் ஊடாகவும் அனுப்பியிருந்தேன்.
இந்த மாவட்டத்தின் உடைய மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் ஒரு உத்தேச திட்டத்தை அனுப்பியிருந்தும் எங்களை இந்தக் கூட்டத்திற்கு அழைக்காதது மிகவும் கவலையான விடயம். இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காது யார் இந்த எல்லை மீள் நிர்ணயத்தை செய்வது. இதேபோல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எல்லை மீள்நிர்ணயத்தின் போதும் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதேபோல் கொழும்பில் உள்ளூராட்சி அமைச்சரின் கூட்டத்திலும் கலந்து கொண்டு எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைத்தோம். அவ்வாறு முன்வைத்தும் கூட சில வேலைத்திட்டங்கள் நடைபெறவில்லை.
குறிப்பாக வவுனியா வடக்கில் சிங்கள மக்களினுடைய நான்கு வட்டாரங்கள் வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நிர்வாக ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் வாழும் மக்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தின் பிரதேச சபைத் தேர்தலுக்கு வாக்களிப்பது இது தான் முதல் தடவை என வெளிப்படுத்தியிருந்தோம்.
ஆகவே அப்படியான செயற்பாடு இனி நடைபெறக் கூடாது. அந்த மக்கள் வாழுகின்ற பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் புதிய பிரதேச சபையை உருவாக்கி அங்கு வாக்களிக்க விட வேண்டும் எனக் கேட்டிருந்தோம் அது தவறும் பட்சத்தில் அந்த மக்களை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் இணைத்தால் அவர்களுக்கும் சுகமாக இருக்கும் என தெரிவித்திருந்தோம்.
வவுனியா வடக்கு பிரதேச சபையினுடைய 47 ஆவது அமர்விலே ஏகமனதாக அவர்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியும் இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நான்கு வட்டாரங்களையும் முல்லைத்தீவு பிரிவில் இருந்து எடுத்து வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களான பட்டிக்குடியிருபக்பு, வெடிவைத்தகல் என்பவற்றுடன் இணைத்திருக்கிறார்கள். அது யாருடன் பேசி அவ்வாறு செய்யப்பட்டது என தெரியாது.
> ஆகவே, எல்லை நிர்ணயம் செய்யும் போது அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரியவர்களிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்மும். அடுத்து மக்கள் பிரதிநிதிகளால் ஈ மக்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.