மஹிந்த ராஜபக்ஷாவின் குடும்பத்துக்கும் பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கும் இடையே பரம்பரை பகையொன்று நிலவி வருவதை தனது அனுபவத்தில் காண்பதாகவும், இது இவ்வாறிருக்கையில், மஹிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்க கொள்கையைப் பற்றி சிலாகித்துப் பேசுவது விசித்திரமானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் இன்று (07) அதிகாலை இடம்பெற்ற நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பண்டாரநாயக்கவும், டீ.ஏ. ராஜபக்ஷவும் ஆரம்ப காலத்தில் மிகவும் நெருக்கமானவர்கள். கட்சிக்காக ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள். இருப்பினும், அவர்களிடையே ஏற்பட்ட மனவிரிசலின் தாக்கம் அண்மைக் காலம் வரை அவரது குடும்பத்தில் இருந்து வருவதைக் கண்டதாகவும் ஜனாதிபதி வரலாற்று நிகழ்வுகளை ஆதாரம் காட்டி விளக்கினார்.
இப்போது, புதிய கட்சி உருவாக்கிக் கொண்டு பண்டாரநாயக்க கொள்கை பேசி வரும் மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சிக் காலத்தில், பண்டாரநாயக்க எதிர்ப்புக் கொள்கையையே வெளிப்படுத்தினார். பண்டாரநாயக்கவின் பெயரைக் கூட பயன்படுத்துவதை அவர் தவிர்ந்துகொண்டார். இது ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளராக இருந்த நீண்ட கால அனுபவத்தில் நான் கண்ட உண்மைகள் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.