இந்த அரசாங்கம் வெளிநாட்டு ஒப்பந்தம் செய்யும் போது மட்டும் அது நாட்டுக்கு எதிரானது எனவும், நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும் கூச்சலிடும் மஹிந்த தரப்பு எதிரணியினர், முதன் முதலில் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டே முதன் முதலில் எக்ஸா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்ஷ இதில் கைச்சாத்திட்டிருந்தார். அக்ஸா ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தமாயின் கோட்டாபய ராஜபக்ஷவே முதலில் நாட்டைக் காட்டிக்கொடுத்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் செய்யப்படவிருக்கும் ஒப்பந்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எக்சா உடன்படிக்கையானது கோட்டாபய ராஜபக்ஷவினாலேயே கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது உங்களில் யாராவது அது பற்றி கதைத்தீர்களா? அதனை எதிர்த்தீர்களா? இல்லையே. அமெரிக்க பிரஜைகள் இருவரே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.