சிங்கள மக்கள் மத்தியில் போர் வெற்றிநாயகனாகவும், தேர்தல்களில் வெற்றிநடைபோடும் சிங்கமாகவும் கருதப்பட்ட வர்ணிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மண்கௌவ்வ வைத்து, பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன சிம்மாசனத்தை கைப்பற்றுவதற்கு வழிவகுத்த நாள் .
ஆம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது எதிரணி கூட்டின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவும் களமிறங்கினர். தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தேர்தலாக அது பார்க்கப்பட்டது.
தமது அமைச்சரவையில் அதுவும் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஒருவர் தன்னை எதிர்த்துக் களமிறங்கமாட்டார் என்று மஹிந்த ராஜபக்ஷ மலைபோல் நம்பினார். இதன்காரணமாகவே முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கும் அவர் பச்சைக்கொடி காட்டியிருந்தார்.
ஆனால், 2014 நவம்பர் 21 ஆம் திகதி பொதுவேட்பாளராகக் களமிறங்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன விடுத்ததுடன், மஹிந்த ஆட்சியில் நடந்த நடந்துகொண்டிருந்த மோசடிகளைப் பட்டியலிட்டுக்காட்டிப் பேசினார். இது மஹிந்த அணிக்குப் பெரும் தலையிடியாக மாறியது. இதற்கிடையில் கட்சித் தாவல்களும் அரங்கேறியதால் ராஜபக்ஷ படையணி ஆட்டம் கண்டது என்றே கூறவேண்டும்.
மறுபுறத்திலிருந்தும் குத்துக்கரணம் இடம்பெற்றதால் இறுதிக்கட்டத்தில் இருதரப்பும் சமபலமென்ற கட்டம் உருவானது. இதனால், தேர்தல் களத்தில் பரபரப்புக்கு இறுதி நொடிவரை பஞ்சமே இருக்கவில்லை.
இறுதியில் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன.
மறுநாள் பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெற்றது. அதன் பின்னர் அமைச்சரவையும் கலைந்தது.
100 நாட்கள் திட்டத்துக்குள் நிறைவேற்றுச் சபை உருவாக்கப்பட்டது. 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய தினம் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் அவை இடம்பெற்றுள்ளன.