தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான மூத்த நடிகை ஜெயசுதாவின் மகனான நிஹார் மல்யுத்த வீரராக நடிக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ எனும் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகிலிருந்து அகில இந்திய அளவிலான திரைப்படங்கள் தயாராகி வெளியாவது அண்மைய ட்ரெண்டாக இருக்கிறது. தேசபக்தி, விளையாட்டு சென்டிமென்ட், மோட்டிவேஷனல், எமோஷனல், ரிச்னஸ், ஸ்பிரிச்சுவல் என லேட்டஸ்ட் கமர்சியல் ஃபார்முலாவுடன் தெலுங்கு திரைப்படங்கள் தயாராகி, பான் இந்திய திரைப்படங்களாக வெளியாகி வெற்றி பெற்று வருகிறது.
அந்த வகையில் அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் மல்யுத்தத்தை மையப்படுத்தி இயக்குநர் ஸதலவாட ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ எனும் திரைப்படத்தில் நிஹார், நாகார்ஜுனா, ரக்தா இஃப்திகார், சத்ய கிருஷ்ணா, சஞ்சனா, மறைந்த நடிகர் சலபதி ராவ், சோனியா, காசி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கந்தேட்டி சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சபு வர்கீஸ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸதலவாட பத்மாவதி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸதலவாட பிரதர்ஸ் வழங்குகிறார்கள்.
‘ரெக்கார்ட் பிரேக்’ எனும் இந்த திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸதலவாட ஸ்ரீனிவாச ராவ், நடிகர்கள் நிஹார், நாகார்ஜுனா, நடிகைகள் ரக்தா இஃப்திகார், சத்ய கிருஷ்ணா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சம்மேளத்தின் முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
”ஆதரவற்ற இரண்டு சிறுவர்கள் கிராமத்திலிருந்து பிழைப்புத் தேடி பட்டணத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு சிவபெருமானின் அருளால் பிரத்யேக ஆற்றல் கிடைக்கிறது. இதனை உணர்ந்து கொண்ட ஒரு பெண்… அவர்களிடம் இருக்கும் சக்தியை அவர்களுக்கான வாழ்வாதாரமாக மாற்றுகிறார். அவர்களை.. அவர்களின் விருப்பத்திற்குரிய மல்யுத்த விளையாட்டில் ஈடுபட வைக்கிறார்.
அதன் மூலம் அவர்கள் சர்வதேச அளவில் புகழ் பெறுகிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் புகழ் பெறுவதற்காக அவர்கள் கடந்து வந்த பாதையை சுவராசியமாகவும், எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படமாக ‘ரெக்கார்ட் பிரேக்’ உருவாகி இருக்கிறது.
இதில் அம்மா சென்டிமென்ட், காதல், மல்யுத்த விளையாட்டு, ஸ்பிரிச்சுவல் எலிமெண்ட்… என அனைத்து அம்சங்களும் இடம்பிடித்திருக்கிறது.
வருகிற மார்ச் 8ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, ஒடியா என எட்டு மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இப்படத்தின் பணிகளை திட்டமிட்டு உருவாக்கி, கடுமையாக உழைத்து நேர்த்தியாக நிறைவு செய்திருக்கிறோம்” என்றார்.