நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்களை குறிவைத்து தனிப்பட்ட சிலரும், குழுக்களும் இத்தகைய மோசடிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அநேகமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களை மையமாக வைத்தே இத்தகைய மோசடிகள் இடம் பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்த வகையில், குறித்த நிறுவனம் ஒன்றின் பெயரில் ,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியை ஆதரிக்க மானிய திட்டம் என்று கூறி விண்ணப்ப படிவம் ஒன்று மலையக தோட்ட பகுதி மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீள ஒப்படைக்கும் போது விண்ணப்ப படிவத்துடன் ரூபா 400 அறவிட படுவதாகவும் குறித்த பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
பண்டாரவளை மற்றும் நுவரேலியா பிரதேச தோட்ட பகுதிகளில் இத்தகைய விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறும் மக்கள், இது தொடர்பில் தமக்கு போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் மேலும், உண்மையிலேயே குறித்த நிறுவனம் மானியத்தொகை வழங்குவதனால் எதற்காக விண்ணப்பப் படிவத்துடன் பணம் அறவிட வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், இது ஒரு தொண்டு நிறுவனமாக இருப்பின் அது, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமா எனவும், கேள்வி எழுப்புகின்றனர். எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து மக்களுக்கு பூரண விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.