மலையகத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? அதற்கு ஆதரவளித்தவர்கள் யார் என்பதில் மலையக கட்சி உறுப்பினர்களுக்கிடையில் சபையில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தனது உரையில் மலையகத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமை தொடர்பில் கவலை வெளியிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் கூறுகையில், நீங்கள் கணித ,விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை என்று கூறினீர்கள்.
ஒரு கவலைக்குரிய விடயத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும். 2016 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்த்தில் ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டது.அதாவது வெளி மாவட்டங்களை சேர்ந்த எந்த மாணவர்களையும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்வாங்க முடியாது என்பதே அந்த தீர்மானம்.
அது பதுளையாக இருக்கலாம், சப்ரகமுவவாக இருக்கலாம்.இங்கெல்லாம் இருந்து 9 ஏ சித்திகளை எடுத்த மாணவர்களைக்கூட நுவரலியா மாவட்டத்திலுள்ள நல்ல கணித , விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்க கூடிய அந்த பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியாத ஒரு தன்மை அந்த தீர்மானத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
இதிலும் கூட ஒரு கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், அப்போது அந்தக்கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரான எமது சமூகத்தை சார்ந்த இராதாகிருஷ்ணனும் கூட இணைந்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டனர்.
இந்த முடிவுக்கு நான் இணங்க மாட்டேன் என அவர் அப்போது சொல்லியிருந்தால் கடந்த 7,8 வருடங்களில் நூற்றுக்கணக்கான கணித , விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்கியிருக்க முடியும் என்றார்.
இதன்போது எழுந்த மனோகணேசன் எம்.பி. கூறுகையில், உங்கள் பிரச்சினை சரி.அது நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் இணைந்து எடுத்த முடிவு. அது நடந்து முடிந்த கதை.
இப்போது எல்லா மாவட்டங்களிலும் கணிதம், விஞ்ஞானம் கற்பிக்கக்கூடிய பாடசாலைகளை உருவாக்க வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து உருவாக்குவோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர். மருதபாண்டி ராமேஸ்வரன் குறிப்பிடுகையில்,
வெளிமாவட்ட மாணவர்களை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு உள்வாங்குவதில்லை என்பது நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் இணைந்து எடுத்த முடிவு என மனோ கணேசன் எம்.பி. கூறினார். அப்படியல்ல. அது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனினால்தான் அந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை நாம் அப்போது எதிர்த்தோம் என்றார்.
இதன்போது எழுந்த முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரான இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வெளி மாவட்ட மாணவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தேன். அப்போது நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெளிமாவட்ட மாணவர்கள் அதிகமாக வந்து தங்களது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளை எடுத்துக்கொண்டு வெளிமாவட்டங்களுக்கு போனார்கள்.
அப்படி அவர்கள் போனதால் நுவரெலியா மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளைப்பெற்றாலும் பல்கலைக்கழகத்துக்கு, மருத்துவ பீடத்துக்கு போகக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஆகவே நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற அந்த மாவட்டத்திலே அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காகவே அந்த முடிவை கொண்டு வந்தோம். அப்போது ஆறுமுகன் தொண்டமான் எம்.பி.யாக இருந்தார். அந்த முடிவு எடுக்கும் பொது அவரும் இருந்தார் என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த ராமேஸ்வரன் எம்.பி. , அந்த நேரம் நான் மாகாண கல்வி அமைச்சராக இருந்தேன். அந்த முடிவுக்கு நாம் முழுமையான எதிர்ப்பு.அந்த திட்டத்தை கொண்டு வந்தது நீங்கள்தான் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா மூஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், நுவரிலியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெளிமாவட்ட மாணவர்களை அனுமதிப்பதில்லையென எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நுவரெலியா மாவட்டத்தின் கல்வித்தரம் அதிகரித்ததா என்பதனைத்தான் பார்க்க வேண்டும்.
என்னுடைய பார்வையில் என்னுடைய சொந்த ஊரான ஹபுகஸ்தலாவை அல்மின்ஹாஜ் பாடசாலை கூடுதலான மருத்துவ பீட மாணவர்களையும் உதாரணமாக சொல்லப்போனால் என்னுடைய மைத்துனியின் மகன் அங்கு பிறந்த ஒருவர்.ரோயல் கல்லூரியில் படித்தவர்.10 ஆம் வகுப்பு வரும்போது அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து படித்து மருத்துவ பீடத்துக்கு தெரிவானார்.
குறைந்த வெட்டுப்புள்ளி என்ற காரணத்தினால் அந்த வாய்ப்பு கிட்டியது. இன்று அவர் மருத்துவத்தில் ஒரு துறை சார்ந்த நிபுணராக உள்ளார்.
இ்ப்படியான வாய்ப்புக்கள் அந்த பிரதேச மாணவர்களுக்கும் கிடைக்கிறதும் இல்லாமல் போகின்ற அதேநேரம் திறமையான மாணவர்கள் வந்து படிக்கின்ற அதேநேரம் அங்குள்ள மாணவர்களின் திறமையும் அதிகரிக்கும் ,உண்மையில் இந்த தடையை செய்த காரணத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மருத்துவ பீட அனுமதி கிடைத்தது என்றால் அதை வரவேற்கலாம் .
ஆனால் அப்படி இல்லாமல் இந்த தடையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனைத்தான் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் சொல்ல வருகின்றார் என நினைக்கின்றேன் என்றார்.