ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீண்டும் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜீப் ரசாக். இவரது கட்சி தலைமையிலான கூட்டணி கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் இவரது கட்சி தோல்வியடைந்தது. அரசு பணத்தில் முறைகேடு செய்து அதை தனது சொந்த வங்கி கணக்கில் வரவு வைத்ததாகவும் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தில் நஜீப் மற்றும் அவரது உதவியாளர்கள் ஊழல் செய்ததாகவும் புதிய அரசு புகார் கூறியது.
இதனால் நஜீப் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் நஜீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பணம் நகை, ஆடம்பர கைப்பைகள் எனன மொத்தம் 273 மில்லியன் டாலர் அளவில் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊழல் தொடர்பாக நஜீப்பின் மனைவி ரோஷ்மா மன்சோரிடமும் புலனாய்வுத்துறை சிறப்பு படையினர் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நஜீப் ரசாக் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 1MDB ஊழல் வழக்கில் அவருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம், அதிகார துஷ்ப்பிரயோகம் என நஜீப் ரசாக் மீது ஏற்கனவே 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மீது 25 புதிய பண மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி நூர் ரஷித் இப்ராகீம் கூறுகையில், நஜீப் ரசாக்கின் வங்கி கணக்கில்681 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முறையற்ற முறையில் பரிமாற்றம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் மீது 25 வழக்குகள் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எந்த முறைகேட்டிலும் தான் ஈடுபடவில்லை என்றும் 2019ம் ஆண்டு நடைபெறும் விசாரணையின் போது நிரபராதி என்று நிரூபிக்க தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் நஜீப் ரசாக் கருத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.