தாய்லாந்தின் Pak Tho மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பேருந்திலிருந்த 48 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைது கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்திருக்கிறது.
மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்துடன் தெற்கு தாய்லாந்து எல்லையை நோக்கிச் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், முறையான ஆவணங்களின்றி இருந்த ரோஹிங்கியா புலம்பெயர் தொழிலாளர்களை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இந்த 48 ரோஹிங்கியாக்களில் 30 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள், 5 பேர் 13 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இவர்கள் மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மியான்மர்- தாய்லாந்துக்கு இடையிலான மலைப்பாங்கிலான எல்லைப்பகுதியை நடந்தே கடந்து தாய்லாந்துக்குள் இவர்கள் சென்றிருக்கின்றனர். அங்கிருந்து மலேசியாவுக்கு செல்வதற்காக தாய்லாந்து தரகர்களை அணுகி இவர்கள் பேருந்தில் ஏறியிருக்கின்றனர்.
மலேசியாவுக்கு சென்று மீன்பிடி படகுகளில் பணியாற்ற அல்லது கட்டுமானத் தொழிலில் பணியாற்ற ரோஹிங்கியா புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணியிருந்திருக்கின்றனர். சிலர் கல்வி கற்க நினைத்திருக்கின்றனர். சட்டவிரோதமாக நுழைந்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் மியான்மருக்கு மீண்டும் நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதே போல், தாய்லாந்தின் Sai Yok மாவாட்டத்தில் 53 மியான்மர் நாட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களும் மலேசியாவுக்கு வேலைக்கு செல்ல எண்ணியிருந்திருக்கின்றனர். மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி தாய்லாந்தில் உள்ள ஆட்கடத்தல் தரகர்கள் 35 ஆயிரம்- 40 ஆயிரம் தாய்லாந்து பாட் (சுமார் 80 ஆயிரம்- 95 ஆயிரம் இந்திய ரூபாய் வரை) மியான்மர் தொழிலாளர்களிடம் பெற்றிருக்கின்றனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நிகழ்ந்து வரும் சூழலில், அங்கிருந்து வேலைக்காகவும் பாதுகாப்புத் தேடியும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.