பெண்ணுரிமைக்குத் தொடர்ந்து குரல்கொடுத்துவருபவரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசப்ஸாயின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இந்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு, ‘குல் மகாய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அம்ஜத் கான் இந்தப் படத்தை இயக்குகிறார். ரீம் ஷேக், திவ்யா தத்தா, முகேஷ் ரிஷி, அபிமன்யு சிங், அஜாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண்கள் கல்வி கற்க உரிமை கோரி மலாலாவின் போராட்டம் தொடங்கியது முதல், நோபல் பரிசு வென்றது வரை அவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் இந்தப் படத்தில் பதிவுசெய்யப்பட இருக்கின்றன. ‘குல் மகாய்’ படக்குழுவினர், கடந்த சில தினங்களாக காஷ்மீரில் முகாமிட்டு காட்சிகளைப் படமாக்கிவருகின்றனர். காஷ்மீரின் கந்தரபால் மாவட்டத்தின் பல இடங்களில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
பெண் குழந்தைகளையும் கல்வி கற்க அனுமதிக்க வேண்டுமென்று குரல்கொடுத்த பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தன் 12-வது வயதில் 2012-ம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். குண்டுக் காயங்களுடன் தப்பித்த அவர், தொடர்ந்து பெண்ணுரிமைக்காகவும் மனித உரிமைக்காவும் குரல்கொடுத்துவருகிறார். அதற்காக அவர், தன் 17-வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.