கிரிக்கெட் போட்டிகளில் அவ்வப்போது அதிர்ச்சியைத் கொடுக்கக் கூடிய அணியாக அயர்லாந்து கிரிக்கெட் அணி திகழ்கிறது. அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியிலும் அயர்லாந்து அணி அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது.
அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள டெண்டா பவுமா தலைமையிலான கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் அயர்லாந்துடன் மோதி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டியில் அயர்லாந்து அணி 40.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிடவே போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முடிவற்ற போட்டியாக அமைந்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பபெடுத்தாடிய அயர்லாந்து அணி , அவ்வணித்தலைவர் அண்டி பெல்பெரினின் அபாரமான சதத்தின் உதவியுடன் (102) நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தென் ஆபிரிக்காவின் காகிசோ ரபாடா, அன்ரிக் நோர்டிச், அண்டிலே பெலுக்வாயோ ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் கேசவ் மஹாராஜ், தப்ரெயிஸ் ஷம்சி ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்த இமாலய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டமை கவனிக்கத்தக்கது.
291 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 48.3 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்றவேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இதன்படி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 1 க்கு 0 என்ற முன்னிலையில் உள்ளது. 3 ஆவதும் கடைசியுமான போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும்.