கல்வி அமைச்சும் அமைச்சின் விளையாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான கால்பந்தாட்டப் போட்டியில் வட மாகாண பாடசாலைகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
பெண்கள் பிரிவில் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியனாகி வரலாறு படைத்தது.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் பங்குபற்றிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மற்றைய பாடசாலை அணிகளைவிட பலசாலி என்பதை நிரூபித்து சம்பியனானது.
இந்த 2 வட மாகாண பாடசாலைகளுடன் இளவாளை புனித ஹென்றியரசர் பாடசாலையும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பிரிவில் மற்றைய அணிகளைவிட பலசாலி என்பதை நிரூபித்து புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனானது.
3 போட்டிகளில் விளையாடிய புனித ஹென்றியரசர் அணி 7 கோல்களை மொத்தமாக போட்டதுன் எதரணிகளுக்கு ஒரு கோலையும் விட்டுக்கொடுக்கவில்லை.
கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கால்பந்தாட்டத்திற்கு பெயர் பெற்ற கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டே புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனானது.
இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடியபோது ஹமீத் அல் ஹுசெய்னி வெற்றிபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புனித ஹென்றியரசர் கல்லூரி பந்துபரிமாற்றம், கோலை நோக்கிய முயற்சிகள், வேகம், விவேகம் அனைத்திலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
அப் போட்டியில் எஸ். சிந்துஜன் 2 கோல்களையும் புகுத்தி புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பினாவதற்கு பெரிதும் உதவினார்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் மாவனெல்லை ஸாஹிரா கல்லூரியை 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் அரை இறுதியில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் புனித ஹென்றியரசர் இலகுவாக வெற்றி கொண்டிருந்தது.
சம்பியனான புனித ஹென்றியசர் அணி
ரீ. நிலூஜன் (தலைவர்), ஜே. திஷான், ஏ. பிரவின், எஸ். சிந்துஜன், என். தனாஸ், ஏ. மலரவன், எஸ். ஜெபேஷ், எஸ். சயந்தன், எஸ். சுஜானஸ், கே. விதுரன், ஆர். அஜய், எம். அன்றுஷன், ஈ. டில்ஷான், யூ. ஜூட் நியூசன், எஸ். சுலக்சன், எஸ். கனியூட், எம். யதுசன், ஏ. கனிஸ்டன். பயிற்றுநர்: ஏ. அஜித்.