தயாரிப்பு : எஸ். பி. கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் & ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
நடிகர்கள் : ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : ஹேம்நாத் நாராயணன்
மதிப்பீடு : 2 / 5
தமிழில் முதன் முதலாக வெளியாகி இருக்கும் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திரைப்படத்தை காண பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களை படக் குழுவினர் அச்சத்தை ஏற்படுத்தினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அமானுஷ்ய விடயங்கள் தொடர்பான தகவல்களை காணொளியாக பதிவிடுவதை தங்களுடைய முத்திரையாக கொண்டிருக்கும் நான்கு யூட்யூப் சேனலை சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அமையப்பெற்றிருக்கும் காத்தூர் என்னும் கிராமத்தில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை கேள்வி படுகிறார்கள். அதாவது காத்தூர் என்ற அந்த கிராமத்தில் மங்கை எனும் பெண்ணுடைய ஆவி மக்களை பழி வாங்குகிறது என்ற விடயத்தையும், பௌர்ணமி தினத்தன்று கன்னிமார்கள் இங்குள்ள குளத்தில் நீராடுகிறார்கள் என்ற விடயத்தையும் கேள்விப்பட்டு அதனை பற்றிய உண்மையை காணொளியாக படமாக்கி, தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவதற்காக கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படைப்பு தான் ‘மர்மர்’ படத்தின் கதை.
நான்கு கதாபாத்திரங்களில் இருவர் ஆண்கள்,இருவர் பெண்கள், இவர்களுடன் அந்த கிராமத்திற்கு வழிகாட்டுவதற்காக ஒரு பெண்,என ஐவர் அடர்ந்த வனத்திற்குள் சாகச மற்றும் அமானுஷ்யமான விடயங்களை தேடி பயணிக்கிறார்கள். இவர்களின் இரண்டு இரவு, இரண்டு பகல், பயணத்தின் போது எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஜேனர் என்றால்.. ‘கதையை கமெரா வழியாகத்தான் விவரிக்க வேண்டும். பின்னணி இசை இருக்கக் கூடாது ‘ என்ற நிபந்தனை உண்டு. இதனை முழுதாக உள்வாங்கி தான் இப்படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. காட்சிகளை அசலான இரவு நேரத்தில் படமாக்கி இருக்கிறார்கள். ஆனால் ஜவ்வாது மலை என்று சொல்லிவிட்டு மலை முகடுகளையோ அல்லது மலைத் தொடரின் பள்ளத்தாக்கு பகுதியையோ காலை மற்றும் இரவு என இரண்டு தருணங்களிலும் காட்சிப்படுத்தாமல் தவற விட்டிருக்கிறார்கள். கதாபாத்திரத்திற்கு அச்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பை கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். இதுபோன்ற திரைப்படங்களுக்கு சிறப்பு சப்தங்கள் தான் ரசிகர்களை அச்சமூட்டும் அம்சம். இத்திரைப்படத்திற்கு அதனை நேர்த்தியாக வழங்கி, ரசிகர்களை ஓரளவிற்கு பயமுறுத்துகிறார்கள். ஆனால் அமானுஷ்ய சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. பேய்- ஆவி- இப்போது வந்துவிடும் இப்போது வந்துவிடும் என எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் அத்தகைய ஹாரர் எலிமெண்ட்கள் இல்லாததால் சோர்வு ஏற்படுகிறது.
இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் பேய், ஆவி, வரலாம் என்ற எதிர்பார்ப்பை படம் நெடுக ஏற்படுத்திருப்பதால் படக் குழுவினர் தங்களுடைய நோக்கத்தில் ஓரளவு வெற்றி பெறுகிறார்கள்.
நடிப்பை பொறுத்தவரை புதுமுகங்கள் என்பதால் தங்களால் முடிந்த அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.
சமூக வலைதளத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இளைஞர்கள்- தங்களின் சமூகப் பொறுப்பை மறந்து கன்டென்டுக்காக தீவிரமாய் அலைகிறார்கள் என்பதை எடுத்துரைத்தாலும் மர்மர் பல போதாமைகளால் தள்ளாடுகிறது.
மர்மர் – பழங்காலத்து இசைக்கருவிகளின் மேடை கச்சேரி.
