பதவி உயர்வுக்காக மருத்துவச் சான்றிதழ் பெறச் சென்ற இராணுவச் சிப்பாய் நோயால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இராணுவ முகாமில் கடமையாற்றிய பிரேமரட்ண (வயது-–43) என்ற சிப்பாயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோயே உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 11ஆம் திகதி மருத்துவச் சான்றிதழ் பெற பலாலி இராணுவ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதும், அது அதிகளவில் இருப்பதும் கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இறப்புத் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.