மரபணு கோளாறால் வந்த பிரச்சனை: எமனை வென்ற 8 வயது சிறுவன்
பிரித்தானியாவில் அரிய வகை மரபணு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சிறுவனை 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி சிகிச்சையால் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் வார்ட் என்ற சிறுவன் தான் பிறந்தது முதல் சுவாசிக்கும் இயந்திரம் மூலமாகவே சுவாசித்து வந்தான்.
தற்போது அவனுக்கு 8 வயது ஆகிவிட்ட நிலையில், Crouzon நோயின் அறிகுறி தென்பட்டுள்ளது. இந்த நோயால் மண்டை ஓடு மூளையின் இடத்தை ஆக்கிரமித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்நிலையில் மருத்துவ குழு ஜார்ஜ்க்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தது. அதாவது, அவன் முகத்தில் உள்ள 14 எலும்புகளை சீரமைக்க 30 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
சீரான முக அமைப்பை பெற 10 ஆயிரம் யூரோவில் ஒரு முக கவசம் 4 மாத காலங்களுக்கு பொறுத்தப்பட்டது.
தற்போது முழுவதும் குணமடைந்த ஜார்ஜ் சுவாசிக்கும் இயந்திரம் இல்லாமலே நிம்மதியாக தூங்கி வருவதாக அவனது தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவனது தாயார் கூறுகையில், மருத்துவர்களின் இந்த செயல் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவன் தூங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருப்பேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கேட்கும் திறனிலும், பார்வையிலும் அவனுக்கு குறைபாடு இருந்தது. ஆனால் தற்போது பரவாயில்லை. ஜார்ஜ் போல் அவதிப்படும் குழந்தைகள் உதவி பெற நான் கண்டிப்பாக உதவுவேன் என்று கூறியுள்ளார்.