பிரி;ட்டனைச் சேர்ந்த பிரபல ஓட்ட வீராங்கனை ஒருவர், நீண்ட தூர மரதன் ஓட்டப் போட்டியொன்றின்போது காரில் பயணித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜோசியா ஸக்ர்ஸேவ்ஸ்கி என்பவரே இவ்வாறு மோசடி செய்துள்ளார்.
47 வயதான ஜோசியா ஓர் மருத்துவர் ஆவார். ஸ்கொட்லாந்தின் டம்பிரைஸ் நகரில் இவர் மருத்துவராக பணியாற்றுகிறார்.
வழக்கமான 26 மைல் (42 கிலோமீற்றர்) தூரம் கொண்ட மரதன் போட்டிகளைவிட மிக நீண்ட தூரம் கொண்ட அல்ட்ரா மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றும் ஜோசியா, உலகின் பல பாகங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். பல சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் தாய்வானில் நடைபெற்ற 48 மணித்தியால போட்டியொன்றில் 255 மைல்களை ஓடி முதலிடம் பெற்றார்.
இம்மாத முற்பகுதியில், மன்செஸ்டர் நகரிலிருந்து லிவர்பூல் நகரம் வரையான 50 மைல் தூரம் கொண்ட பிரித்தானிய அல்ட்ரா மரதன் 2023 போட்டியில் அவர் 3 ஆவது இடத்தைப் பெற்றார்.
எனினும், அவர் இப்போட்டியில் 2.5 மைல் தூரம் காரில் பயணம் செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
ஓட்டம் மற்றும் சைக்கிளோட்டத்துக்கான செயலி ஒன்றில் தரவேற்றப்பட்ட தரவுகளின் மூலம் இது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை செய்யப்பட்டதாகவும், அப்போட்டியாளர் மற்றும் ஏனைய போட்டியாளர்கள், நிகழ்ச்சிக் குழுவினர் உட்பட பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் அப்போட்டியாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்படி போட்டியின் பணிப்பாளர் வெய்ன் ட்ரிங்வோட்டர் தெரிவித்துள்ளார்.
அவரின் நண்பர் ஒருவர் பிபிசியிடம் இது தொடர்பாக கூறுகையில், அவுஸ்திரேலியாவிலிருந்து பிரிட்டனை அடைந்து சில மணித்தியாலங்களில் இப்போட்டியில் பங்குபற்றியபோது அவர் உடல்நிலையை மோசமாக உணர்ந்திருந்தார். தான் செய்த விடயத்துக்கு அவர் மன்னிப்பு கோர விரும்புகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டியின் 3 ஆவது இடம் மெல் ஸ்கைஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.