மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சிபிஐ டைரிக்குறிப்பு’. இப்படத்தின் ஐந்தாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் ‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ என்ற திரைப்படம் 1988ஆம் ஆண்டில் வெளியானது. இந்த திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் ‘ஜாக்கிரதா’ என்ற பெயரிலும், 2004ஆம் ஆண்டில் ‘சேதுராம ஐயர் சிபிஐ’ என்ற பெயரிலும், 2005 ஆம் ஆண்டில் ‘நாராயணன் சிபிஐ’ என்ற பெயரிலும் நான்கு பாகங்களாக வெளியாகி வெற்றியை பெற்றது.
இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற புலனாய்வுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்து இரசிகர்களை கவர்ந்திருந்தார்.
தற்போது இப்படத்தின் ஐந்தாம் பாகம் தயாராகவிருப்பதாகவும், இப்படத்தின் பணிகள் ஒகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இப்படத்தின் திரைக்கதையை திரைக்கதையாசிரியர் எஸ். என். சுவாமி எழுத, பிரபல இயக்குனர் கே.மது இயக்குகிறார்.
இந்தப் படத்தில் மம்முட்டியுடன் மலையாள நடிகர்களான ரஞ்சி பணிக்கர், சௌபின் சாகிர், ‘பாபநாசம்’ புகழ் நடிகை ஆஷா சரத், சாய்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சிபிஐ டைரிக்குறிப்பு ஐந்தாம் பாகம் பதினைந்து ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தயாரானாலும், புதிய தலைமுறை இரசிகர்களை கவரும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
மலையாளம் மற்றும் தமிழில் ‘சிபிஐ 5 ’ உருவாகுவதால் மம்முட்டியின் இரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.