இந்தியாவில் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, 21 மாத காலத்திற்கு இந்தியக் குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமதுவால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி, நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்திய குடியரசு வரலாற்றில் இந்த நெருக்கடி நிலை காலம், சர்ச்சை மிகுந்ததாக இன்றளவும் கூறப்படுகிறது.
இந்த நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 44 ஆண்டுகள் ஆகின்றன. இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நெருக்கடி நிலையை நினைவுபடுத்தி மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா, ‘சூப்பர் எமர்ஜென்சி’யில் தான் இருந்து வருகிறது ’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், எமர்ஜென்சிக்கு சற்றும் குறைவானது அல்ல மம்தா பானர்ஜியின் ஆட்சி என மத்திய மந்திரி பிரகஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எமர்ஜென்சியில் நடைபெற்ற ஆட்சிக்கு சற்றும் குறைந்ததல்ல மேற்கு வங்காளம் மாநிலத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி நடத்தி வரும் ஆட்சி. மிக மோசமாக அங்கு நடத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.