பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் (64), வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தனது கட்சிக்கு நன்கொடை பெற்றதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டது.
இதை விசாரணைக்கு ஏற்ற தேர்தல் ஆணையத்தை விமர்சித்த இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த இம்ரானுக்கு எதிராக தேர்தல் ஆணையம் 2 வாரத்துக்கு முன்பு கைது வாரன்ட் பிறப்பித்தது. மேலும் 26-ம் தேதி ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இம்ரான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கைது வாரன்ட்டை ரத்து செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்ரான் கான் நேரில் ஆஜரானார். மேலும் இந்த விவகாரத்தில் இம்ரான் கான் மன்னிப்பு கோரும் மனு ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் இம்ரான் புதிதாக எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மீன்டும் மன்னிப்பு கோரும் மனுவை சமர்ப்பித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரும் காலத்தில் கவனமாக பேசுமாறு இம்ரானுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.