மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்கலாக 7 பேர் நேற்று சனிக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் இணைந்து நேற்று மாலை 4 மணியளவில் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது புதையல் தோண்டிக்கொண்டிருந்த 7 சந்தேக நபர்கள் புதையல் தோண்டும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை அதிகாரி; ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள், ஸ்கேனர் இயந்திரம், மந்திரப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


