மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கூராய் கிராமத்தில் ஓடும் பறங்கி ஆற்றில் சட்ட விரோதமான முறையில் அதிக அளவில் மணல் மண் அகழ்வு செய்யப்படுவதாக குறித்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது குறித்த ஆற்றில் நீர் வரத்து இல்லாமல் காய்ந்து கிடக்கின்றது.
ஆனால் சில இடங்களில் நீர் வரும் அளவு ஆழமாக தோண்டி மணல் மண் அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது ஆற்றின் கரையோரத்தில் நிற்கும் பெரிய மரங்கள் மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக வேருடன் பல மரங்கள் பிடுங்கப்பட்டு காணப்படுகின்றது.
அனுமதி வழங்கப்பட்டும், சட்ட விரோதமாகவும் அளவுக்கு அதிகமாக மண் அகழ்வு சம்பவம் மற்றும் பாதிப்புகள் குறித்து கூராய் கிரா மக்கள் தொடர்ச்சியாக அதிகாரிகளிடம் தமது முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கூராய் ஒரு குடியேற்ற கிராமம்.அதன் அருகில் சீது விநாயகர் குளம் கிராமம் உள்ளது.
இங்கு சுமார் 120 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில் மாந்தை அடம்பன் பகுதியில் வசித்த மக்கள்; 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னாரில் ஏற்பட்ட வறட்சி மற்றும் பஞ்சம் காரணமாக கூராய் ஆற்றங்கரை யோரங்களில் குடியேறி மேட்டு நிலப்பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் குறித்த ஆற்றை நம்பியே விவசாயமும் மேட்டு நிலப்பயிர்ச் செய்கைகளை செய்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்துள்ளனர்.
நடந்து முடிந்த யுத்தத்தினால் மன்னார் மாவட்டத்தில் மிக மோசமான பாதிக்கப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போதும் அந்த மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்வில்லை.
இந்த நிலையில் தாம்; நம்பி இருந்த இந்த ஆற்று வளங்களும் கொள்ளையிடப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது இதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன் வரை வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் சந்தியோகு வை தொடர்புகொண்டு வினவிய போது,,,,
கூராய் மக்கள் கூறுவது போல் கட்டுப்பாடு இல்லாத இந்த மணல் அகழ்வுகளினால் எதிர் காலத்தில் அப்படியொரு நிலை வரலாம்.
எனவே தற்காலிகமாக அப்பகுதியில் மணல் அகழ்விற்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி அந்த கிராமத்து மக்களுடனும் சில பொது அமைப்புகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே ஏதேனும் முடிவு எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் அனுப்ப உள்ளேன். என மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் தெரிவித்தார்.