தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (25) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது மேலும் புதிதாக 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து இம்மாதம் தற்போது வரை 252 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது வரை 759 தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் நகர பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 14 பேரும்,மேலும் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது வரையில் தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது அபாயகரமான நிலமையாகும்.எனவே மக்கள் இதனை உணர்ந்து பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி தேவை இன்றி வீடுகளில் இருந்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.