தன்னுடைய மனைவியையும், மகனையும் கட்டாயப்படுத்த நாடு கடத்த வேண்டாம் என்று வட கொரியர் ஒருவர் சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர்கள் வட கொரியா அனுப்பப்பட்டால், சிறை தண்டனையை அல்லது இறப்பை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.
ரகசியமாக சீனாவில் எல்லையை கடந்தபோது கைது செய்யப்பட்ட 10 வட கொரியர்கள் குழுவில் இந்த பெண்ணும், அவருடைய 4 வயது மகனும் இருப்பதாக தெரிகிறது.
தன்னை லீ என்று மட்டுமே இனம்காட்டுவதற்கு கூறியுள்ள இந்த மனிதர், 2015 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு தப்பி சென்றார். அவர் தன்னுடைய செய்தியை காணொளி பதிவாக அனுப்பியது பிபிசிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மனைவியும், மகனும் வட கொரியாவுக்கு அனுப்பப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் அல்லது அரசியல் சிறை முகாமில் அடைக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், அமெரிக்க டொன்ல்ட் டிரம்பும் தன்னுடைய குழந்தையை தங்களுடைய பேரனாக எண்ணி, சுதந்திரமான நாடான தென் கொரியாவுக்கு அனுப்புவதை எதிர்பார்கிறேன்” என்று இந்த தந்தை தெரிவித்திருக்கிறார்.
“தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். நாடு கடத்துவதில் இருந்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள். ஒரு குடும்பத்தின் தந்தையாக இந்த இரு தலைவர்களும் எனது குடும்பத்திற்கு உதவ வேண்டும்” என்று அவர் மன்றாடி கேட்டு கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்டிருக்கும் தன்னுடைய மகனின் படங்களை பார்த்து தான் மிகவும் துன்புறுவதாக அவர் கூறியிருக்கிறார்.
என்னுடைய குழந்தை என்னை பெயர் சொல்லி அழைப்பது ஏறக்குறைய கேட்கிறது. என்னுடைய குழந்தை மோசமான சிறை அறையில் தந்தைக்காக அழுது கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. நான் எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை” என்று அவர் கூறியிருக்கிறார்.
சீனாவின் வட கிழக்கிலுள்ள லியோவ்நிங் மாகாணத்திலுள்ள ஷென்யாங்கில் பாதுகாப்பான வீட்டில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நாட்டை விட்டு தப்பியோடிய 10 பேர் குழு ஒன்று நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விபரங்கள் பற்றி தெரியவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் ஹூவா சுன்யிங் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரங்களை உள்நாட்டு மற்றும் சாவதேச சட்டப்படியும், மனிதநேய கொள்கைகள் படியும், சீனா தொடர்ந்து கையாண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
வட கொரியாவில் இருந்து தப்பியோடுவோரை தடுக்கும் முயற்சியாக சீனாவின் இந்த கைது நடவடிக்கை வந்துள்ளது.