பெரம்பூர் மேம்பாலத்துக்கும் ஐ.சி.எஃப் பகுதிக்கும் இடையில் உள்ளது, ராஜீவ் காந்தி நகர். போலீஸ் எஸ்.பி ஒருவர், தன்னுடைய மனைவியுடன் அந்த வழியாக காரில் வந்துகொண்டிருக்கிறார். திடீரென அந்தக் காரை வழிமறித்துள்ளது ரௌடி கும்பல். எஸ்.பி சுதாரிப்பதற்குள், அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் காரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் எஸ்.பியும் அவரது மனைவியும் நிலைகுலைந்தனர் . “யார் நீங்க? எதுக்காக இப்படிப் பண்றீங்க..?” என இருவரும் அலற, அரிவாள் முனையில் இருவரையும் சிறைவைத்தனர் ரௌடிகள்.
இருவரிடமும் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துள்ளது அந்தக் கும்பல். எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்த எஸ்.பி-யிடம், ‘எவனுக்கு வேணும்னாலும் போன் போடு. ஊருக்குள்ள எவனாவது பெரியவன் இருந்தா வரச் சொல்லு போ…’ எனத் தலையில் அடித்துள்ளனர். அந்த இடத்திலிருந்து எஸ்.பி, அவரது மனைவி, கார் டிரைவர் ஆகியோர் நீண்ட தூரம் ஓடியுள்ளனர். ஓர் இடத்தில் ஆசுவாசப்படுத்திக்கொண்ட எஸ்.பி, அந்த வழியாகச் சென்றவரின் உதவியோடு ஐ.சி.எஃப் காவல்நிலையத்துக்குப் போன்செய்கிறார்.
எதிர்முனையில் போன் எடுத்தவரிடம், ‘யார்னே தெரியலை… பத்துக்கும் மேற்பட்டோரைக்கொண்ட கும்பல் வந்து…’ என அதிர்ச்சியோடு விளக்க, ‘எஸ்.பி மேலயே கை வெச்சுட்டானுங்களா?’ எனக் கருவியபடியே, இரண்டு போலீஸ் பேட்ரல் வாகனம் மற்றும் போலீஸார் புடைசூழ, சம்பவ இடத்துக்கு வந்தார் எஸ்.ஐ ஒருவர். இதைக் கண்டு அசராத அந்தக் கும்பல், எஸ்.ஐ-க்கும் உடன் வந்தவர்களுக்கும் ஆளுக்கு தலா ஓர் அறை கொடுத்துள்ளது. பின்னர், நடுரோட்டில் சிரித்தபடியே, ‘எங்களைத் தேடி வர்ற அளவுக்கு தைரியம் வந்திருச்சா..?’ எனக் கலாய்த்துள்ளனர். வேறு வழியில்லாமல், வாகனங்களை விட்டுவிட்டு ‘உயிர் பிழைத்தால் போதும்’ என எஸ்.பி-யை மீட்க வந்த போலீஸார் தப்பி ஓடிவிட்டனர். இது நடந்தபோது மணி நள்ளிரவு 1.30. இதன்பிறகு வேறுவழியில்லாமல், கமாண்டோ படைக்குத் தகவல் கொடுத்துள்ளனர் உயர் அதிகாரிகள்.
அதிகாலை 5 மணிக்கு வந்த கமாண்டோ படை, போலீஸ் பேட்ரல் வாகனத்தை மீட்டுள்ளது. இதில், எஸ்.பி-யின் கார் மட்டும் மிஸ்ஸிங். சாவகாசமாக தாக்குதலை முடித்துவிட்டு, எஸ்.பி காரை ஓட்டிச் சென்றுவிட்டது அந்த மர்மக் கும்பல். அந்தக் காரையும் சற்று முன்னர்தான் கண்டுபிடித்துள்ளனர்.
‘இப்படியொரு கொடூரத் தாக்குதலை நடத்தியது யார்?’ எனக் கண்டறிய எஸ்.பி-யிடம் சில புகைப்படங்களைக் காட்டியுள்ளனர் ஐ.சி.எஃப் காவல்நிலைய போலீஸார். மணவாளன், அப்பு என்ற இரண்டு ரௌடிகளை அடையாளம் காட்டியிருக்கிறார் எஸ்.பி. தாக்குதலுக்குக் காரணமான மற்றவர்களை வலைவீசித் தேடி வருகிறது சென்னை மாநகர காவல்துறை.